கும்பகோணம்
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொங்கியது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் புகழ்பெற்றது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை விழா தொடங்கியது. பின்னர் சுப்பிரமணியசுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளினார்,.
இவ்விழாவின் தொடர்ச்சியாக வரும் 11-ம் தேதி வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் விதிவுலா நடைபெறுவுள்ளது. விழாவின் முக்கியநாளான வரும் 10-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும், இரவு 9 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், இரவு 11 மணிக்கு திருக்கார்த்திகை தீபக்காட்சியும் நடைபெற உள்ளது.
வருகிற டிச. 11 -ம்தேதி காலை படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அன்று இரவு 8மணியளவில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
இவ்விழாவினை முன்னிட்டு விழா நாட்களில் வேதபாராயணம், சிறப்பு சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, சிறப்பு நாதஸ்வர இன்னிசை நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.