சென்னை : தொழிலாளர்கள் தங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் 1.18 கோடி செலவில் காப்பகம் அமைக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2500க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான தொழிலார்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை லாரிகளிலிருந்து ஏற்றி இறக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான அடிப்படை வசதி மற்றும் இருப்பிட வசதி செய்து தரவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்காக 2 கோடியில் தங்குமிடம் மற்றும் உணவகம் அமைக்கப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இதற்கான பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இதன்படி கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 1.18 கோடி செலவில் இரவு காப்பகம் மற்றும் உணவகம் அமைக்க பெருநகர் வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் அளிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளர்கள் தங்குவதற்காக 1.18 கோடியில் காப்பகம்: உணவகமும் அமைகிறது